செம ஸ்மார்ட்… அலெக்சா உதவியுடன் 15 மாத தங்கையை காப்பாற்றிய சிறுமி… குவியும் பாராட்டுக்கள்!!

481

தொழில்நுட்பம் இரு பக்கமும் கைப்பிடி இல்லாத கத்தியைப் போன்றது. அது யார் கையில் கிடைக்கிறது? எப்படி பயன்படுத்தப் போகிறார்கள் என்பதில் இருக்கிறது சூட்சுமம். அலெக்ஸா உதவியுடன் தன்னுடைய தங்கையைக் காப்பாற்றிய சிறுமிக்கு உலகம் முழுவதும் இருந்தும் பாராட்டுக்கள் குவிகிறது.

உத்தரபிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி தனது 15 மாத சகோதரியை அலெக்சாவின் உதவியுடன் காப்பாற்றியுள்ளார். தன் தங்கை விளையாடிக் கொண்டிருந்த அறைக்குள் எதிர்பாராதவிதமாக குரங்கு நுழைந்தபோது, அலெக்ஸாவிடம் தன் தங்கையைக் காப்பாற்ற நாயைப் போல் குரைக்கும்படி சிறுமி சாமர்த்தியமாக கேட்டாள்.

அலெக்சா நாயின் சத்தத்தின் ஒலியை எழுப்பியது. இதனால் அந்த அறைக்குள் சென்ற குரங்கு ஓடிவிட்டது. இந்த 13 வயது சிறுமியின் புத்திசாலித்தனமான செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப உதவியால் தோல்வி அடைவோமா அல்லது முன்னேறுவோமா என்ற சந்தேகம் இருந்தது.

ஆனால் இந்த 13 வயது சிறுமியின் இந்த செயல், தொழில்நுட்பம் எப்போதும் நமது படைப்பாற்றலை ஊக்குவிக்கும் என்பதை காட்டுகிறது. மிகவும் அசாத்தியமாக யோசித்து தன் தங்கையை காப்பாற்றினாள் சிறுமி. இவர் வளர்ந்த பின் வேண்டுமானால் எங்களுடன் இணைந்து பணியாற்றலாம் என அதில் குறிப்பிட்டுள்ளார்.