டீ பரிமாறுவதில் ஏற்பட்ட தகராறு… மாமியாருக்கு மருமகளால் நேர்ந்த சோகம்!!

1051

புதுக்கோட்டை..

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே, மலைக்குடிப்பட்டியைச் சேர்ந்தவர் வேலு. இவர் மனைவி பழனியம்மாள் (84). இவரின் மருமகள் கனகு (42). பழனியம்மாளுக்கும், மருமகள் கனகுக்கும் அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கமாக இருந்திருக்கிறது.

இந்த நிலையில்தான், வழக்கம்போல், இருவருக்குமிடையே நேற்றிரவு தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதில், ஆத்திரமடைந்த மருமகள் கனகு, அருகே கிடந்த இரும்புக் கம்பியைக் கொண்டு, மாமியார் பழனியம்மாளின் தலையில் சரமாரியாகத் தாக்கியிருக்கிறார். பலத்த காயமடைந்த பழனியம்மாள் சரிந்து கீழே விழுந்திருக்கிறார்.

சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம், பக்கத்தினர் ரத்த வெள்ளத்தில், உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த பழனியம்மாளை மீட்டு விராலிமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதையடுத்து, சிகிச்சைக்காக திருச்சிக்கு கொண்டுசெல்லப்பட்டார் பழனியம்மாள்.


அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சையளித்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இது பற்றி தகவலறிந்த இலுப்பூர் போலீஸார், பழனியம்மாளின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

தொடர்ந்து, கனகுவைக் கைதுசெய்த போலீஸார், அவரிடம் விசாரணை நடத்தினர். போலீஸாரிடம் இது பற்றி கேட்டபோது, “கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கனகுக்கு மனநல பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. அதற்கு சிகிச்சையும் எடுத்து வந்திருக்கிறார். ஆனாலும், கடந்த சில ஆண்டுகளாக, தற்போது சிகிச்சைக்குச் செல்லாமல் இருந்திருக்கிறார். இதற்கிடையேதான், மாமியாருக்கும், மருமகளுக்குமிடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டுவந்திருக்கிறது.

ஏற்கெனவே, பழனியம்மாளை, கனகு கம்பால் இரண்டு முறை கடுமையாகத் தாக்கியிருக்கிறார். தற்போதைய பிரச்னையைப் பொறுத்தவரை, மாமியார் பழனியம்மாள், மருமகள் கனகுவிடம் டீ போட்டுத் தரும்படி கேட்டிருக்கிறார்.

கனகு டீ போட்டுக்கொண்டு வந்து கொடுக்கும்போது, `ஏன் ஆறிப்போய் இருக்கிறது… வேற டீ எடுத்துவா’ என்று கனகுவைத் திட்டியிருக்கிறார். இதனால், ஆத்திரமடைந்த கனகு, அருகே கிடந்த கம்பியை எடுத்து பழனியம்மாளின் தலையில் சரமாரியாகத் தாக்கியிருக்கிறார்.

அதில் காயமடைந்த பழனியம்மாள், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்” என்றனர். குடும்பத் தகராறில் மாமியாரை, மருமகள் அடித்துக் கொன்ற சம்பவம் புதுக்கோட்டையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.