தன் உருவத்தை போல் உள்ள பெண்ணை கொலை செய்த இளம் பெண் : பகீர் சம்பவம்!!

4324

உத்தரபிரதேசத்தில்..

உறவினர்களை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தன் தோற்றத்தை போல் உள்ள பெண்ணை, காதலுடன் சேர்ந்து இளம் பெண் கொலை செய்த அதிர்ச்சிகர சம்பவம் உத்திரபிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள சூரஜ்பூரில் வசித்து வருபவர் ஹேமா சவுதிரி. வயது 28. இவர் நொய்டாவில் ஒரு வணிக வளாகத்தில் பணியாற்றி வந்தார்.

இதனிடையே, கடந்த நவம்பர் 12-ம் தேதி ஹேமா சவுதிரி பணி முடிந்து வீடு திரும்பவில்லை. இதனால், சந்தேகமடைந்த அவரது குடும்பத்தினர் இது குறித்து போலீசில் புகார் அளித்தனர்.


புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், ஹேமா காணாமல் போன அன்று அவரை கடைசியாக பார்த்த அஜய் தாகூர் மற்றும் அவரது காதலி பயல் பாஹ்தி என்பவர்களை பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதில் பயலின் பெற்றோர் தனது உறவினரான சுனில் என்பவரிடமிருந்து ரூ. 5 லட்சம் கடன் வாங்கியுள்ளனர்.

கடனை திருப்பி தரும்படி பயலின் பெற்றோரிடம் சுனில் தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். அதேபோல், பயலின் அண்ணி மற்றும் அவரது 2 சகோதர்களும் பயலின் பெற்றோருக்கு தொல்லை கொடுத்து வந்துள்ளனர்.

இதனால், கடன் தொல்லை காரணமாக பயலின் பெற்றோர் கடந்த மே மாதம் தற்கொலை செய்துகொண்டனர். தனது பெற்றோரின் தற்கொலைக்கு காரணமான உறவினர்கள் சுனில், அண்ணி மற்றும் அவரது 2 சகோதர்களையும் பழிவாங்க வேண்டும் என்று பயல் திட்டமிட்டார்.

தான் சிக்காமல் தனது பெற்றோரின் தற்கொலைக்கு காரணமான அனைவரையும் கொலை செய்ய பயல் முடிவு செய்தார். இது குறித்து தனது காதலன் அஜய் தாகூரிடமும் பயல் கூறியுள்ளார்.

தான் போலீசில் சிக்காமல் தனது உறவினர்களை பழிவாங்க பயல் திட்டம் தீட்டிக்கொண்டிருந்தார். அந்த சமயத்தில் பயல் பாஹ்தி தனது காதலன் அஜய் தாகூருடன் கிரேட்டர் நொய்டாவில் உள்ள வணிக வளாகத்திற்கு சென்றுள்ளார்.

அங்கு தன்னைபோன்ற உடல் அமைப்பு கொண்டு வணிக வளாகத்தில் வேலை செய்துவந்த ஹேமா சவுதிரியை பயல் பார்த்துள்ளார். ஹேமாவின் உடல் அமைப்பு தன்னை போன்று உள்ளதை கவனித்த பயல் ஹேமாவை கொலை செய்து உயிரிழந்தது தான் தான் என நம்ப வைக்க திட்டமிட்டுள்ளார்.

அதன் பின் தன் பெற்றோர் தற்கொலை செய்ய காரணமான உறவினர்கள் சுனில், அண்ணி மற்றும் அவரது 2 சகோதர்களையும் கொலை செய்ய பயல் சதி திட்டம் தீட்டியுள்ளார். அதன்படி கடந்த 12-ம் தேதி ஹேமாவை பைக்கில் ஏற்றிக்கொண்டு அஜய் தனது காதலி பயலின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

அங்கு வீட்டில் காத்திருந்த பயல் தனது காதலன் அஜயுடன் சேர்ந்து ஹேமாவை கழுத்தறுத்து கொலை செய்துள்ளனர். ஹேமாவை கொலை செய்த பின் அவரது முகத்தில் கொதிக்கும் சமையல் எண்ணெய்யை ஊற்றி முகத்தை சிதைத்துள்ளார்.

சூடான கொதிக்கும் சமையல் எண்ணெய் முகத்தில் பட்டதால் முகத்தின் அழகு பாதிக்கப்பட்டுவிட்டதாகவும், இந்த உலகம் தன்னை ஏற்றுக்கொள்ளததாலும் தற்கொலை செய்துகொள்வதாக பயல் தன் கைப்பட கடிதம் ஒன்றையும் எழுதி வைத்துள்ளார்.

பின்னர் தான் எழுதிய தற்கொலை கடிதத்தை கொலை செய்த ஹேமாவின் அருகே வைத்துவிட்டு பயல் தனது காதலன் அஜய் உடன் வீட்டை விட்டு வெளியேறி இருவரும் திருமணம் செய்துக்கொண்டுள்ளனர் என்பது போலிசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. பின்னர் இருவரையும் போலிசார் கைது செய்தனர்.