தீபாவளி நாளில் சோகம் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து 6 வயது சிறுமி உட்பட 4 பேர் உயிரிழப்பு!!

214

நாடு முழுவதும் நேற்று தீபாவளி கொண்டாடப்பட்ட நிலையில், தீபாவளி கொண்டாட்டத்தின் இரவில் சோகத்தை ஏற்படுத்தும் விதமாக மகராஷ்டிரா மாநிலம் நவி மும்பை வாஷி பகுதியில், செக்டர்–14ல் அமைந்துள்ள ‘ராஹேஜா ரெசிடென்சி’ வீட்டுவசதி வளாகத்தில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் 6 வயது சிறுமி உட்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இது குறித்து வெளியான தகவலின்படி, 10வது மாடியில் குறுக்கு மின்சாரம் காரணமாக தீ பரவியதாக சந்தேகிக்கப்படுகிறது. அந்த தீ வேகமாக 11 மற்றும் 12வது மாடிகளுக்கும் பரவி அபார்ட்மெண்ட் குடியிருப்பாளர்களை பரபரப்புக்கு உள்ளாக்கியது.

இந்த சம்பவத்தில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இந்த தீ விபத்தில் உயிரிழந்தவர்கள்:வேதிகா சுந்தர் பாலகிருஷ்ணன் (6), கமலா ஹிரால் ஜெயின் (84), சுந்தர் பாலகிருஷ்ணன் (44), பூஜா ராஜன் (39) என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தீ விபத்து குறித்த தகவலறிந்ததும், தீயணைப்பு துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துசென்று பல மணி நேரப் போராட்டத்திற்கு பின்னர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

அதே நேரத்தில், இதற்கு முன் மும்பை கஃப் பேரேட் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 வயது சிறுவன் உயிரிழந்திருந்தது குறிப்பிடத்தக்கது.


கடந்த சில வாரங்களில் மும்பை கடற்கரை சாலையில் கார் தீப்பற்றி எரிந்தது, கந்திவாலியில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 பேர் இறந்தது போன்ற தொடர் நிகழ்வுகள் மாநிலத்தில் தீ பாதுகாப்பு விழிப்புணர்வுகள் குறித்து கேள்வி எழுப்பியுள்ளன.