நகைக்காக முன்னாள் காதலியை கொலை செய்த இளைஞன்.. பதற வைக்கும் சம்பவம்!!

544

சிவகாசியில்..

சிவகாசி அருகே சித்து ராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுசீந்திரன்(3). முன்பாக பள்ளி ஆசிரியராக பணிபுரிந்த இவர், தற்போது டிரேடிங் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி ஷீலாராணி (வயது25), தம்பதியர் இருவருக்கும் 10 மாதத்தில் பெண் குழந்தை உள்ளது.

ஷீலா ராணி தனது வீட்டில் இருந்தபடியே பெண்களுக்கான ஒப்பனை கலைஞராக பணிபுரிந்து வந்தார். சிவகாசி மேற்கு ரிசர்வ் லைன் பகுதியைச் சேர்ந்தவர் ஷேக் முகமதுயாசின்( வயது 31) இவர் ஆன்லைன் மூலமாக விற்பனை செய்யப்படும் பொருட்களை விநியோகம் செய்யும் பணியாளராக உள்ளார்.

இவருக்கு கடந்த 2 வருடங்களுக்கு முன்பு மின்னுராள் என்பவருடன் திருமணமாகி குழந்தை ஏதுமில்லை. கடந்த 10 வருடங்களுக்கு முன்பு ஷீலாராணியும், சேக் முகமதுயாசினும் திருமணத்திற்கு முன்பாக சிவகாசி புது ரோட்டு தெருவில் உள்ள ஒரு ஜவுளி கடையில் ஒன்றாக பணிபுரிந்து வந்த போது இவர்கள் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பின்பாக ஷேக் முகமது யாசின் வெளிநாட்டு வேலைக்கு சென்றுள்ளார்.


தற்போது இருவருக்குமே திருமணமாகி சிவகாசி வட்டாரத்தில் அவரவர் குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில், மீண்டும் ஷீலா ராணிக்கும், ஷேக் முகமதுயாசினுக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தனக்கு அதிகமாக கடன் இருந்து, பணத்தட்டுப்பாடு உள்ளதால் ஷீலா ராணியிடம், சேக் முகமதுயாசின் பண உதவி கேட்டதாக தெரிகிறது.

இந்நிலையில் கடந்த 4 ம் தேதி வெள்ளிக்கிழமை சிவகாசியில் இருந்து திருத்தங்கல் செல்லும் சாலையில் உள்ள ராதாகிருஷ்ணன் காலனி பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்கு ஒப்பனை பணிக்காக செல்வதாக கூறிவிட்டு ஷீலா ராணி சென்றுள்ளார்.

பணி முடிந்து ஷீலா ராணி வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த அவரது கணவர் சுசீந்திரன், தனது மனைவியை காணவில்லை என சிவகாசி கிழக்கு காவல் நிலையத்தில் 5ம் தேதி சனிக்கிழமை புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த கிழக்கு காவல் நிலைய போலீசார், தங்களது விசாரணையை பல்வேறு கோணங்களில் முடுக்கி விட்டுள்ளனர்.

அப்போது ஷீலா ராணியின் செல்போன் நம்பரை போலீசார் ஆய்வு மேற்கண்ட போது ஷேக் முகமது யாசின் செல் நம்பரும் பதிவு செய்ய பட்டிருந்ததால், அவரிடமும் போலீசார் துருவி துருவி விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது ஷேக்முகமது யாசின் சிவகாசி வட்டார காவல் துணை கண்காணிப்பாளர் தனஞ்செயனிடம் அளித்த வாக்குமூலத்தில், சிவகாசி ராதாகிருஷ்ணன் காலனியில் உள்ள ஒரு வீட்டுக்கு ஒப்பனை பணிக்காக வந்தஷீலா ராணியை தான் செல்போன் மூலமாக தொடர்பு கொண்டு பேசியதாகவும்,

பின்பாக அவரை ஒரு காரில் ஏற்றிக் கொண்டு திருத்தங்கலிலிருந்து விருதுநகர் செல்லும் சாலையில் ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்றதாகவும்,

அங்கு பணம் கேட்டபோது தன்னிடம் பணம் இல்லை என்று கூறிய ஷீலாராணியிடம் அவர் கழுத்தில் அணிந்திருந்த சுமார் 3 பவுன் மதிப்புள்ள தங்கச் செயினை கேட்டதாகவும், அவர் அதை தர மறுத்ததால் செயினை பறித்துக் கொண்டு அவரை கிணற்றுக்குள் தள்ளி கொலை செய்ததாக ஒப்புக்கொண்டதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

காணாமல் போனவர் என பதிவு செய்யப்பட்ட வழக்கை அதன் தொடர்ச்சியாக கொலை வழக்காக மாற்றி பதிவு செய்துள்ள சிவகாசி கிழக்கு பகுதி போலீசார், குற்றவாளியான வாலிபர் ஷேக்முகமது யாசினை கைது செய்து மேல்விசாரணை நடத்தி வருகின்றனர்.