புதுக்கோட்டையில்..

புதுக்கோட்டை மாவட்டம், நாகமலை காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராகப் பணி புரிந்தவர் வசந்தி. சிவகங்கை மாவட்டம் இளையான்குடியைச் சேர்ந்த அர்ஷத் (32), பேக் தயாரிக்கும் தொழில் செய்து வருகிறார்.

இவர் தனியாக கம்பெனி தொடங்க சிலரிடம் ரூ.10 லட்சம் கடன் வாங்கி மதுரை நாகமலை புதுக்கோட்டை பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு ஒருவரிடம் 5 லட்சம் ரூபாய் கடன் பெறுவதற்காக காத்திருந்த போது, நாகமலை புதுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்தி போலீஸ் வாகனத்தில் வந்துள்ளார்.

காத்திருந்த அர்ஷத்திடம் ரூ.10 லட்சத்தை பையுடன் இன்ஸ்பெக்டர் வசந்தி பறித்துக் கொண்டதாகவும், இந்த பணத்தை திரும்ப கேட்டால், கஞ்சா வழக்கு போட்டு கைது செய்து விடுவேன் என மிரட்டியதாகவும் தெரிய வந்தது.

இந்த சம்பவம் கடந்த கடந்த 2021ம் ஆண்டு ஜூலை மாதம் 5ம் தேதி நடந்தது. அதனைத் தொடர்ந்து அர்ஷத், நாகமலை காவல் நிலையத்திற்குச் சென்று ஆவணங்களை காட்டி, தனது பணத்தை திருப்பி கேட்டுள்ளார். ஆனால் வசந்தி, பொய் வழக்கு போட்டு சிறையில் அடைப்பேன் என அர்ஷத்தை மிரட்டியுள்ளார்.

இதனால் அர்ஷத், மதுரை காவல் கண்காணிப்பாளரிடம் புகார் கொடுத்தார். அர்ஷத் கொடுத்த புகாரின் அடிப்படையில் வசந்தி உள்ளிட்ட அவரது கூட்டாளிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து வசந்தி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் தலைமறைவாக இருந்த அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அதனைத் தொடர்ந்து வசந்தி, ஜாமீன் பெற்று வழக்கை சந்தித்து வந்தார். ஜாமீன் பெற்ற வசந்தி வழக்கின் புகார்தாரர்களை மிரட்டி சாட்சிகளைக் கலைக்க முயற்சி செய்தார்.

இதன் காரணமாக, மிரட்டலுக்குள்ளான நபர் மதுரை மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளித்தார். அவர் அளித்தப் புகாரின் அடிப்படையில், சாட்சிகளை கலைத்தல் எனும் பிரிவின் கீழ் வசந்தி மீது தனியாக ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

தொடர்ந்து வசந்தியை கைது செய்ய, தென் மண்டல ஐ.ஜி. அஸ்ராக் கார்க் ஆலோசனையின் பேரில், ஸ்ரீவில்லிப்புத்தூர் டி.எஸ்.பி. சபரிநாதன் தலைமையில் ஒரு தனிப்படை அமைக்கப்பட்டது. டி.எஸ்.பி. சபரிநாதன் தலைமையிலான தனிப்படையினர் நேற்று காலை மதுரை ஊமச்சிகுளம் பகுதியிலுள்ள வசந்தியின் வீட்டுக்குச் சென்றனர்.

அப்போது வசந்தி அவர்களிடமிருந்து தப்பித்து வெளியே செல்ல முயன்றார். போலீசாரை பார்த்ததுமே, காரை வேகமாக ஓட்டியுள்ளார் வசந்தி. எனினும், பின்னாடியே சேசிங் செய்து, வசந்தியை போலீசார் மடக்கி பிடித்தனர்.

காரை வழிமறித்து அவரை கீழே இறங்குமாறு தெரிவித்தனர். ஆனால், வசந்தி கீழே இறங்க மாட்டேன் எனக் கூறி காரிலேயே பிடிவாதமாக உட்கார்ந்திருந்தார்.

பெண் போலீஸ் அதிகாரிகள், குண்டுகட்டாக வசந்தியை இழுத்துச் சென்று கைது செய்து வேனில் ஏற்றி அழைத்து சென்றனர். வசந்தி செய்த அட்டகாசத்தினால், அந்த பகுதியே பரபரப்பாகி விட்டது. வசந்தியிடம் தொடர்ந்து விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.















