மகளுக்கு பிரமாண்ட திருமணம் நடத்திய ஹோட்டலிலேயே மனைவியுடன் தொழிலதிபர் தற்கொலை.. அதிர்ச்சி சம்பவம்!!

1106

கேரளாவில்..

கேரள மாநிலம், திருவனந்தபுரம் மலையின்கீழ் பகுதியைச் சேர்ந்தவர் சுகதன் (71). அவரின் மனைவி சுனிலா(70). இவர்களுக்கு உத்தரா என்ற ஒரே மகள் இருக்கிறார். வெளிநாட்டில் பிசினஸ் செய்துவந்த சுகந்தன், சில ஆண்டுகளுக்கு முன்பு ஊரில் செட்டில் ஆனார்.

இந்த நிலையில், அவரின் ஒரே மகளுக்கு திருவனந்தபுரத்திலுள்ள சொகுசு ஹோட்டலில்வைத்து, இந்தாண்டு ஜனவரி மாதம் ஆடம்பரமாகத் திருமணம் நடத்திவைத்தார்.

இந்த நிலையில், மகளுக்கு திருமணம் செய்துவைத்த அதே சொகுசு ஹோட்டலில் கடந்த 26-ம் தேதி அறை எடுத்து தங்கியிருக்கின்றனர் சுகதனும், சுனிலாவும். வீட்டில் பராமரிப்புப் பணிகள் நடப்பதால், 10 நாள்களுக்கு அந்த ஹோட்டலில் தங்கவிருப்பதாக அவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

அறை எடுத்த சமயத்தில் அவர்களது மகள் உத்தராவும் உடன் சென்றிருக்கிறார். ஹோட்டல் அறையிலேயே உணவு வரவழைத்து சாப்பிட்டு வந்திருக்கின்றனர்.


நேற்று முன்தினம் காலை உணவு வாங்கிச் சாப்பிட்டவர்கள், பின்னர் அறையைவிட்டு வெளியே வரவே இல்லை. நேற்று முன்தினம் மதியம் அறையை சுத்தம் செய்வதற்காக பணியாளர் சென்றிருக்கிறார். அங்கு துணிகள் போடும் கம்பியில் ஒரே துப்பட்டாவில் சுகதனும் அவரின் மனைவியும் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்திருக்கின்றனர்.

இது குறித்து ஹோட்டல் நிர்வாகி கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீஸார் அங்கு சென்று இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.

இது குறித்து போலீஸார் நடத்திய விசாரணையில், சுகதன் மஸ்கட் நாட்டில் பிசினஸ் செய்து வந்திருப்பதும், பின்னர் அங்கிருந்து ஊருக்கு வந்தவர் சென்னையில் உதிரிபாகங்கள் விற்பனை செய்துவந்ததும் தெரியவந்தது.

தொழிலில் தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்ட நிலையில் தனது பங்களா வீட்டை விற்றும், கடன் வாங்கியும் கடந்த ஜனவரி மாதம் மகள் உத்தராவுக்கு ஆடம்பரமாகத் திருமணம் செய்துவைத்திருக்கின்றனர்.

அதன் பின்னரும் பண நெருக்கடியில் சிக்கிய சுகதன் களக்கூட்டம் பகுதியில் வாடகைக்கு வசித்திருக்கிறார். இந்த நிலையில் என்ன நினைத்தார் எனத் தெரியவில்லை தன்னுடைய மகளுக்குத் திருமணம் செய்துவைத்த ஹோட்டலில் அறை எடுத்து வசித்திருக்கிறார்.

பின்னர் அதே ஹோட்டல் அறையில் கணவனும் மனைவியும் தற்கொலை செய்திருப்பதாக விசாரணையில் தெரிவந்திருக்கிறது. அவர்களின் ஒரே மகள் உத்தரா தனியார் கம்பெனியில் வேலை செய்துவருவதால், அவரால் பெற்றோரை அருகில் இருந்து கவனிக்க முடியாத நிலை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. கடன் காரணமாக தொழிலதிபர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.