தூத்துக்குடி…

தூத்துக்குடி முத்தையாபுரம், அன்னை தெரசா நகரைச் சேர்ந்தவர் அற்புதராஜ். அந்தப் பகுதியில் ஃபேன்சி கடை நடத்திவருகிறார். இவரின் மனைவி செல்வராணி. இவர்களின் மகன் தங்கதுரை. அவரின் மனைவி அஸ்வினி. தங்கதுரையும் அஸ்வினியும் வேலை நிமித்தமாக சென்னையில் வசித்துவருகின்றனர்.

காந்தி ஜெயந்தியையொட்டிய மூன்று நாள்கள் விடுமுறையில் மனைவியுடன் தங்கதுரை தூத்துக்குடிக்கு வந்திருக்கிறார். மனைவி, மகன் அஸ்வந்த் ஆகியோரை இங்கு விட்டுவிட்டு அடுத்த வாரம் அழைத்துச் செல்வதாகக் கூறிவிட்டு தங்கதுரை மட்டும் சென்னைக்குச் சென்றிருக்கிறார்.

இந்த நிலையில் கடந்த 3-ம் தேதி மாமனார் அற்புதராஜ், ஃபேன்சி கடைக்கு சென்ற நேரத்தில் அஸ்வினியும் மாமியார் செல்வராணியும் வீட்டில் தனியாக இருந்திருக்கிறார்கள்.

அந்த நேரத்தில் ’பர்தா’ அணிந்த ஒருவர் திடீரென வீட்டுக்குள் நுழைந்து, கத்தியைக் காட்டி மிரட்டி, அஸ்வினியையும் செல்வராணியையும் ஓர் அறைக்குள் தள்ளி கயிற்றால் கட்டிப்போட்டுவிட்டு அவர்கள் கழுத்தில் கிடந்த நகைகள்,
பீரோவில் இருந்த நகைகள் என 58 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்துவிட்டு தப்பிச் சென்றிருக்கிறார். இது தொடர்பாக முத்தையாபுரம் காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவுசெய்தனர்.

இது தொடர்பாக நான்கு தனிப்படைகளும் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில், மாமியார் செல்வராணி, பேரன் அஸ்வந்த் ஆகிய இருவரும் ஒரே மாதிரியான தகவலைக் கூறியிருக்கின்றனர். ஆனால், அஸ்வினி மட்டும் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியிருக்கிறார்.

இது போலீஸாருக்கு மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பின்னர் அஸ்வினியிடம் நடத்திய விசாரணையில், ஆன்லைன் டிரேடிங்கில் ஏற்பட்ட நஷ்டத்தால் ஏற்பட்ட கடனை அடைக்க அக்காவின் உதவியால் நகைகளைக் கொள்ளையடித்தை ஒப்புக்கொண்டார்.

கொள்ளைச் சம்பவம் நடந்து ஐந்து நாள்களுக்குப் பிறகு உண்மையைக் கண்டறிந்தது எப்படி என போலீஸாரிடம் பேசினோம். “செல்வராணி, அவரின் மருமகள், பேரன் அஸ்வந்திடம் தனித்தனியாக விசாரணை நடத்தியபோது அஸ்வினி முன்னுக்குப் பின் முரணாகவும் ஒருவித பதற்றத்துடன் பதலளித்தார்.

சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது செல்வராணி, அவரின் பேரன் கூறிய தகவல்கள் சரியாக இருந்தது. அஸ்வினியின் செல்போனை வாங்கி ஆய்வு செய்தபோது கால் ஹிஸ்டரியை முழுமையாக டெலிட் செய்திருந்தார். அது மேலும் எங்களுக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியது.

அவரிடம் தீவிரமாக விசாரணை செய்தபோதுதான் உண்மையை ஒப்புக்கொண்டார். முன் அனுபவம் இல்லாமல் ஆன்லைன் டிரேடிங் செய்து பணத்தை இழந்திருக்கிறார். இதைச் சமாளிப்பதற்காக தனது 30 சவரன் தங்க நகைகளை அடகுவைத்து அவற்றையும் மீட்க முடியாமல் இருந்ஹிருக்கிறார்.

நகைகள் பற்றி கணவர் தங்கதுரை கேட்டபோதெல்லாம் திருட்டு பயம் இருப்பதால், பாதுகாப்புக்காக என் அக்கா சுசீலாவிடம் கொடுத்து வைத்திருக்கிறேன் எனச் சொல்லி சமாளித்துவந்திருக்கிறார்.

நகை விவகாரம் குறித்து அஸ்வினி, தன் அக்கா சுசீலாவிடம் கூறவே இருவரும் சேர்ந்தே கொள்ளையடித்து அந்த நகைகளை விற்று, அதன் மூலம் அடகுவைத்த தனது நகைகளை மீட்டுவிடலாம் என திட்டமிட்டிருக்கின்றனர்.
திட்டமிட்டபடி சுசீலா பர்தா அணிந்து வந்து மூவரையும் தனி அறைக்குள் தள்ளி கட்டிப்போட்டு கொள்ளையடிப்பதுபோல் நடந்து நகைகளை எடுத்துச் சென்றிருக்கிறார். அஸ்வினியைக் கைதுசெய்திருக்கிறோம். தலைமறைவான அவரின் அக்கா சுசீலாவைத் தேடிவருகிறோம்” என்றார்.















