மருமகள் கழுத்தை இறுக்கி கொலை செய்த மாமியார் : வலிப்பு வந்து கீழே விழுந்த போது நடந்த விபரீதம்!!​​​​​

470

கள்ளக்குறிச்சியில்..

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள அயன்குஞ்சரம் கிராமத்தை சேர்ந்தவர் கல்வராயன் மகன் ராமகிருஷ்ணன் வயது 38. இவரது மனைவி செல்வி. வயது 30. இவர்களுக்கு லோகிதாஸ் என்ற 10 வயது மகனும் கோகுல் என்ற 7 வயது மகனும் உள்ளனர்.

கணவன் மனைவி இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். இதனால் ராமகிருஷ்ணன் மனைவி மீது கடும் கோபத்தில் இருந்து வந்தார். இதனிடையே கடந்த 2ம் தேதி ராமகிருஷ்ணன் தந்தை கல்வராயன் உயிரிழந்த நிலையில் இந்த செய்தி அறிந்த செல்வி மாமனார் துக்க நிகழ்ச்சியில் பங்கேற்க அயன்குஞ்சரம் கிராமத்திற்கு சென்றார்.

பின்னர் அங்கேயே செல்வி தங்கி இருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் செல்வி திடீரென உயிரிழந்து விட்டதாக அவருடைய பெற்றோருக்கு ராமகிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார்.


இதையடுத்து அங்கு சென்று பார்த்த செல்வியின் தாய் நடையம்மாள் தனது மகள் சாவில் சந்தேகம் உள்ளதாக கூறி எலவனாசூர்கோட்டை காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியானது. அதில், செல்வியின் கணவர் ராமகிருஷ்ணன், தனது மனைவி மீது கடும் கோபத்தில் இருந்து வந்துள்ளார்.

இதனால் அவரை கொலை செய்ய முடிவு செய்து தனது தாயிடம் இதுகுறித்து தெரிவித்துள்ளார். அதற்கு அவரும் சம்மதம் தெரிவித்துள்ளார். அதன்படி மாமனார் இறப்புக்கு வந்த செல்வியிடம் கணவர் மற்றும் மாமியார் உடனே செல்லாதே, காரியம் முடிந்த பின்னர் போகலாம் என்று கூறி அவரை அங்கேயே தங்க வைத்துள்ளனர்.

இந்த நிலையில் செல்விக்கு எதிர்பாராதவிதமாக வலிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் கீழே விழுந்து துடித்து கொண்டிருந்த செல்வியை மாமியார் நாககன்னி சரமாரியாக தாக்கி, அவரது கழுத்தையும் இறுக்கி கொலை செய்தது போலிசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து வலிப்பு ஏற்பட்டு செல்வி கீழே விழுந்து இறந்துவிட்டதாக இருவரும் நாடகம் ஆடி உள்ளனர். இதையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். வலிப்பு வந்த மருமகளை காப்பாற்றாமல் ஈவு இறக்கம் இன்றி மாமியால் கழுத்தை நெறித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.