
கேரளாவில் மாயமான இளம்பெண் வாய்க்குள் வெடிபொருள் வைத்து கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு உள்ளார். இது தொடர்பாக அவரது கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.
கேரள மாநிலம் கண்ணூர் அருகே உள்ள இரிக்கூர் பகுதியை சேர்ந்தவர் சுமதா. அவரது மகன் சுபாஷ். துபாயில் பணிபுரிந்து வருகிறார். அவரது மனைவி தர்ஷிதா (22).
இந்த தம்பதிக்கு இரண்டரை வயதில் ஒரு குழந்தை உள்ளது. தர்ஷிதாவின் சொந்த ஊர் கர்நாடக மாநிலம் ஹுன்சூர் ஆகும். அவருக்கு இதே பகுதியை சேர்ந்த சித்தராஜு (22) என்ற வாலிபருடன் தொடர்பு இருந்து வந்துள்ளது.
திருமணமாகி கேரளா சென்ற பிறகும் தர்ஷிதா, சித்தராஜியுடனான தொடர்பை கைவிடவில்லை. இந்தநிலையில் கடந்த 22ம் தேதி சுபாஷின் வீட்டில் இருந்து 30 பவுன் நகை, ரூ. 5 லட்சம் பணம் திருடு போனது.
இதுகுறித்து இரிக்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். இதற்கிடையே தர்ஷிதா மாயமானார். அவரை பலமுறை முயன்றும் போலீசாரால் தொடர்பு கொள்ள முடியவில்லை.
இதனால் தர்ஷிதாவுக்கும், வீட்டில் நடந்த கொள்ளைக்கும் தொடர்பு இருக்கலாம் என்று போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதற்கிடையே கர்நாடக மாநிலம் சாலிகிராமத்தில் உள்ள ஒரு லாட்ஜில் தர்ஷிதா கொடூரமான முறையில் கொல்லப்பட்டு கிடப்பதாக இரிக்கூர் போலீசுக்கு தகவல் கிடைத்தது.
அவரது வாய்க்குள் டெட்டனேட்டர் வைத்து வெடிக்க வைத்து கொலை செய்யப்பட்டிருந்தார். இவரது முகம் சின்னா பின்னமாகி இருந்தது.

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த கர்நாடகா போலீசார் தர்ஷிதாவின் ஆண் நண்பர் சித்தராஜுவை கைது செய்தனர்.
கணவனின் வீட்டிலிருந்து 30 பவுன் நகை, ரூ. 5 லட்சம் பணத்தை தர்ஷிதா தான் திருடி இருக்கலாம் என்றும் அந்தப் பணத்தை பறிப்பதற்காகவே தர்ஷிதாவை,
சித்தராஜு கொலை செய்திருக்கலாம் என்றும் கர்நாடக போலீசார் கருதுகின்றனர். இதுகுறித்து விசாரிப்பதற்காக கண்ணூர் போலீசார் கர்நாடக மாநிலத்திற்கு விரைந்துள்ளனர்.















