விடுதி அறையில் கன்னியாஸ்திரி தூக்கிட்டு தற்கொலை..போலீசார் விசாரணை!!

460

தேனி மாவட்டம் சின்னமனூரில் விடுதி அறையில் கன்னியாஸ்திரி ஒருவர் தூக்கிட்டு தற்கொலைச் செய்து கொண்டது அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

திருவண்ணாமலையைச் சேர்ந்தவர் துரைசாமி. இவரது மகள் ஜெனட்மேரி (35). தேனி மாவட்டம் சின்னமனூரில் உள்ள ஊராட்சி பள்ளி ஒன்றில் ஜெனட்மேரி ஆசிரியராக பணியாற்றி வந்தார்.

இதற்காக சின்னமனூர் பகுதியில் உள்ள கன்னியாஸ்திரிகளுக்கான விடுதியில் தங்கி இருந்தபடியே தினந்தோறும் பள்ளிக்குச் சென்று வந்தார் ஜெனட்மேரி. இந்நிலையில் நேற்று காலை வழக்கம் போல் மற்ற கன்னியாஸ்திரிகள் அனைவரும் பள்ளிக்கு புறப்பட்டு சென்றுள்ளனர்.

ஆனால் நீண்ட நேரமாக ஜெனட்மேரியின் அறை கதவு திறக்கப்படாமல் இருந்தது. இதனால் சந்தேகமடைந்த சக கன்னியாஸ்திரிகள் ஜெனட்மேரியின் அறைக் கதவைத் தட்டிப் பார்த்து அழைத்தனர்.

சத்தம் வராததால் உள்ளே சென்று பார்த்த போது தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த கன்னியாஸ்திரிகள் உடனடியாக சின்னமனூர் போலீசாருக்கு இது குறித்து தகவல் கொடுத்தனர்.


தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் ஜெனட் மேரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.