ஹத்ராசுக்கு சென்ற கேரள பத்திரிக்கையாளர் மீது பாய்ந்தது தீவிரவாத தடுப்பு சட்டம்!

429

உத்தரப் பிரதேச………

உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராசுக்கு சென்ற கேரளாவை சேர்ந்த பத்திரிக்கையாளரை அம்மாநில காவல்துறையினர் தீவிரவாத தடுப்பு பிரிவு சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் இளம் பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு உயிரிழந்ததாக சொல்லப்படுகின்றது. இந்நிலையில், இந்த விடயம் நாடு முழுவதும் பெரும் சீற்றத்தினை ஏற்படுத்தியிருந்தது.

ஆனால், அம்மாநில காவல்துறையினர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு இளம் பெண் உள்ளாக்கப்படவில்லை என கூறியுள்ளனர்.

இந்த சம்பவத்தினையொட்டி கேரளாவை சேர்ந்த பத்திரிக்கையாளர் ஒருவரும், அவருடன் மேலும் இருவரையும் ஹத்ராசுக்கு செல்லும் வழியில் உ.பி மாநில காவல்துறை கைது செய்துள்ளது.


கைது செய்தவர்கள் மீது தீவிரவாத தடுப்பு சட்டமான ‘உபா‘ சட்டத்தின் 17 வது பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த பிரிவானது ‘பயங்கரவாத செயலுக்காக நிதி திரட்டுதல்‘ என்கிற அம்சத்தினை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சித்திக் கப்பன் என்கிற கேரள பத்திரிக்கையாளர் கடந்த திங்கட்கிழமை ஹத்ராசுக்கு சென்றபோது இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவர் கேரள யூனியனின் உழைக்கும் பத்திரிகையாளர்களின் டெல்லி பிரிவின் செயலாளராகவும், கேரளாவை தளமாக கொண்டு செயல்படும் பிரபல இணையதள பத்திரிக்கையாளராகவும் உள்ளார்.

காவல்துறை தனது அறிக்கையில், “சந்தேகத்திற்கிடமான நபர்கள் சிலர் டெல்லியிலிருந்து ஹத்ரசுக்கு சென்றுகொண்டிருக்கிறார்கள் என தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில், சித்திக் கப்பன், அதிக்-உர் ரஹ்மான், மசூத் அகமது மற்றும் ஆலம் ஆகியோர் மதுராவில் உள்ள ஒரு சோதானை சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர்.” என கூறியுள்ளது.

விசாரணையின்போது, பி.எஃப்.ஐ மற்றும் அதன் இணை அமைப்பான கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (சி.எஃப்.ஐ) உடன் தங்களுக்கு தொடர்பு இருப்பதாக கைது செய்யப்பட்டவர்கள் தெரிவித்துள்ளதாக காவல்துறை கூறியுள்ளது. மேலும், “நான் இந்தியாவின் மகள் அல்ல” என்ற துண்டுப்பிரசுரம் அவர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.