கிறிஸ் கெய்லின் விக்கெட்… டோனி சொல்லிக் கொடுத்த ரகசியம்: இந்திய அணியின் இளம் வீரர் பகிர்ந்த தகவல்!!

1069

கிரிக்கெட் உலகின் அதிரடி மன்னான கிறிஸ் கெய்லின் விக்கெட் வீழ்த்துவது குறித்து டோனி தனக்கு வழங்கிய ஆலோசனைகளை, இந்திய அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளர் ஷபாஸ் நதீம் பகிர்ந்துள்ளார்.

இந்திய அணியின் விக்கெட் கீப்பரான டோனி, எதிரணி துடுப்பாட்ட வீரர்களின் ஸ்டம்ப்புக்கு பின்னால் நின்று உற்று கவனிப்பதால், எந்த துடுப்பாட்ட வீரருக்கு எப்படி வீசினால் அவரை வீழ்த்தலாம் என்று தெரிந்தவர்.

டோனி சொல்லும் ஆலோசனையை கேட்டு சுழற்பந்து வீச்சாளர்கள் அதன்படி செயல்பட்டாலே போதும். அந்தளவிற்கு துல்லியமான ஆலோசனைகளை வழங்கக்கூடியவர் டோனி.

அந்தவகையில், மேற்கிந்திய தீவு அணியின் அதிரடி மன்னனான கெய்லுக்கு எப்படி பந்துவீச வேண்டும் என டோனி தனக்கு கூறிய ஆலோசனையை இந்திய அணிக்காக விளையாடி வரும் இளம் வீரர் ஷபாஸ் நதீம் பகிர்ந்துள்ளார்.

இந்திய அணிக்காக நதீம் ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் மட்டுமே ஆடியுள்ளார். ஐபிஎல்லில் 2011லிருந்து 2018 வரை டெல்லி கேபிடள்ஸ் அணியில் ஆடிய நதீம், 2019 சீசனில் சன்ரைசர்ஸ் அணியில் ஆடினார்.


2017 ஐபிஎல்லில் ஆடுவதற்கு முந்தைய விஜய் ஹசாரே டிராபி தொடரின் போது, ஜார்கண்ட் அணியில் ஆடிய நதீமிற்கு டோனியுடன் இருப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது.

அந்த சமயத்தில், கெய்லுக்கு எப்படி பந்துவீச வேண்டும் என்று கேட்டதற்கு, டோனி கூறிய ஆலோசனையை நதீம் கூறுகையில், ஐபிஎல்லில் கெய்லுக்கு எதிராக நீண்டகாலமாக நான் பந்துவீசியதில்லை. இடது கை சுழற்பந்து வீச்சாளரின் பவுலிங்கை கெய்ல் அடி நொறுக்கிவிடுவார் என கேள்விப்பட்டிருக்கிறேன்.

அதனால் கெய்லுக்காகத்தான் ரிஸ்ட் ஸ்பின் போடவும் கற்றுக்கொண்டேன்.

டோனியுடன் விஜய் ஹசாரே தொடரில் இணைந்து பழகும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது, இடது கை சுழற்பந்து வீச்சாளரான நான் கெய்லுக்கு எப்படி பந்துவீச வேண்டும் என்று டோனியிடம் கேட்டேன்.

அதற்கு, முதலில் நதீம் இதுவரை கெய்லுக்கு பந்துவீசியதில்லை. நீ பந்துவீசக்கூடிய நிலை வந்தால், கெய்லை விளாசுவதற்கு ஏற்ப அவருக்கு ஈசியான ஏரியாவில் வீசிவிடக்கூடாது. பந்தை அவரிடமிருந்து நன்றாக விலக்கி வீசு அல்லது அவரது கால்காப்பை நோக்கி உள்வருமாறு வீசு.

அப்படி வீசினால், அவரால் பெரிய ஷாட்டுகளை ஆடமுடியாது. சிங்கிள் மட்டுமே எடுப்பார் என்று டோனி எனக்கு ஆலோசனை கூறினார்.

2017 ஐபிஎல் சீசனில், கெய்லுக்கு பந்துவீசும் வாய்ப்பை அப்போதைய டெல்லி அணியின் கேப்டன் ஜாகீர் கான், நதீமிற்கு வழங்க, டோனி சொன்ன ஆலோசனையை பின்பற்றி அந்த போட்டியில், தான் வீசிய மூன்றாவது பந்திலேயே கெய்லை வீழ்த்தியதாக நதீம் நினைவுகூர்ந்தார்.