குரேஷியாவின் முன்னணி டென்னிஸ் வீரருக்கும் கொவிட்-19 கொரோனா தொற்று நோய் உறுதி!

831

குரேஷியாவின் முன்னணி டென்னிஸ் வீரரான போர்னா கோரிக், கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

உலகின் 33ஆவது தரநிலை வீரரான போர்னா கோரிக் இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில், ”நான் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளேன் என்பதை ஒவ்வொருவருக்கும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். கடந்த சில நாட்களாக என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் சோதனை எடுத்துக் கொள்ளுவதை உறுதி செய்ய விரும்புகிறேன்.

இது யாருக்கும் வலியை ஏற்படுத்தியிருந்தால் அதனால் வருந்துகிறேன். நான் சிறப்பாக இருப்பதாக உணர்கிறேன். எனக்கு எந்தவித அறிகுறியும் இல்லை. பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும் இருங்கள்” என பதிவிட்டுள்ளார்.


முன்னதாக, பல்கேரியாவை சேர்ந்த பிரபல டென்னிஸ் நட்சத்திரமான கிரிகோர் டிமிட்ரோவ், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார் என்பது நினைவுக்கூறத்தக்கது.

சர்வதேச டென்னிஸ் தொடர்கள் இரத்து செய்யப்பட்டும், ஒத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் உலகின் முதல்நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், தொண்டு நிறுவனத்திற்கு நிதி சேர்க்கும் வகையில் அட்ரியா டூவர் தொடரை ஏற்பாடு செய்திருந்தார். இதில் போர்னா கோரிக் விளையாடியது குறிப்பிடத்தக்கது.