பிரபல வெற்றிப்படங்களின் தயாரிப்பாளர் தற்கொலை… அதிர்ச்சியில் திரையுலகினர்!!

82

பிரபல தொழிலதிபரும் பல வெற்றிப் படங்களின் தயாரிப்பாளருமான சௌந்தர்ய ஜெகதீஷ் பெங்களூருவில் தனது வீட்டில் நேற்று சடலமாக மீட்கப்பட்டார்.

இது குறித்த தகவல் அறிந்த போலீசார், செளந்தர்ய ஜெகதீஷ் உடலைக் கைப்பற்றி, தற்கொலை வழக்காக பதிவு செய்து, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு, விசாரித்து வருகின்றனர்.

‘அப்பு & பப்பு’, ‘மஸ்த் மஜா மாடி’, ‘சிநேகிதரு’ மற்றும் ‘ராம்லீலா’ உள்ளிட்டப் பல படங்களை கன்னடத்தில் தயாரித்தவர் செளந்தர்ய ஜெகதீஷ்(55). படங்கள் தயாரிப்பது மட்டுமல்லாது, பிசினஸிலும் கவனம் செலுத்தி வந்தார்.

இப்படியான சூழ்நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை பெங்களூருவில் உள்ள அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை மீட்ட போலீஸார் தற்கொலை வழக்காகப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

ஜெகதீஷ் அதிகாலை 4 மணியளவில் தற்கொலை செய்து கொண்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். காலை 9.40 மணியளவில் நடந்த சம்பவம் குறித்து காவல்துறையினருக்குத் தெரிவிக்கப்பட்டது.


ஜெகதீஷ் உடலை மருத்துவமனைக்கு போலீஸார் கொண்டு சென்றனர். அங்கு அவரது உடலைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிர் பிரிந்து விட்டதை உறுதிப்படுத்தினர்.

ஜெகதீஷின் மனைவி புகார் அளித்துள்ளதாக வடக்கு டிசிபி சைதுலு அதாவத் தெரிவித்தார். “இந்த வழக்கை அனைத்து கோணங்களிலும் விசாரித்து வருகிறோம்.

சமீபத்தில், அவரது மாமியார் காலமானார். அவர் மீது அலாதி அன்பு வைத்திருந்த ஜெகதீஷ் அவரது மரணத்தால் மனச்சோர்வடைந்தார். அவர் மன அழுத்தத்திற்கான சிகிச்சையும் எடுத்து வந்தார்” என்று அவர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

ஜெகதீஷின் உறவினர்கள் செய்தியாளர்களிடம் கூறுகையில், குடும்பத்தில் நிதி பிரச்சினையோ அல்லது அவருக்கு உடல்நலப் பிரச்சனைகளோ எதுவும் இல்லை எனத் தெரிவித்தனர்.

இவரது மகளுக்கு சமீபத்தில் திருமணம் நடந்தது. அவருக்கு மனைவி மற்றும் ஒரு மகன் உள்ளனர். ராஜாஜிநகரில் அமைந்துள்ள ஜெட்லாக் ரெஸ்டோபார் நிறுவனமும் ஜெகதீஷுக்கு சொந்தமானது.

இங்கு தர்ஷன் நடித்த ‘காட்டேரா’ படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் நள்ளிரவு 1 மணிக்கு மேல் வரையிலும் பார்ட்டி நடந்ததாக ஜெகதீஷ் மற்றும் பலர் மீது கடந்த ஜனவரி மாதம் வழக்கு பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.