கடத்தப்பட்டதாக கூறப்பட்ட பெண்… வெளியான பரபரப்பு ஆடியோ : அம்பலமான அதிர்ச்சித் தகவல்!!

196

தென்காசியில்..

தென்காசி மாவட்டம் இலஞ்சி அருகே உள்ள கொட்டாக்குளம் பகுதியை சேர்ந்தவர் மாரியப்பனின் மகன் வினித். இவர் சென்னையில் மென்பொருள் பணியாளராக பணிபுரிந்து வருகிறார்.

குஜராத் மாநிலத்தை சேர்ந்த நவீன் பட்டேல் தென்காசி பகுதியில் 20 ஆண்டுகளாக மரக்கடை நடத்தி வருகிறார். இவரது மகள் கிருத்திகா. இவர் வினித் என்பவரை பல ஆண்டுகளாக காதலித்து வந்தார்.

இந்த நிலையில் இவர்களது காதலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் கடந்த டிசம்பர் மாதம் 27ஆம் தேதி இருவரும் பெற்றோரின் எதிர்ப்பை மீறி நாகர்கோவில் நீதிமன்றத்தில் சட்டப்பூர்வமாக திருமணம் செய்து கொண்டனர்.


இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன் பெண் வீட்டார், வினித்தை தாக்கிவிட்டு கிருத்திகாவை வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்றனர். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து குற்றாலம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து கிருத்திகா பெற்றோர் உள்ளிட்ட பலரை கைது செய்தனர்.

அத்துடன் கிருத்திகாவை மீட்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில்தான் கடந்த சில தினங்களுக்கு முன்பு கிருத்திகா வீடியோவை வெளியிட்டிருந்தார். அதில் தன்னை யாரும் கடத்தவில்லை.

தான் உறவுக்கார நபரை திருமணம் செய்து கொண்டேன் என கூறியிருந்தார். இந்த வீடியோவும் பரபரப்பை கிளப்பியது. இந்த நிலையில் கிருத்திகாவை மீட்டுத் தர கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வினித் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனு இரு தினங்களுக்கு முன்னர் விசாரணைக்கு வந்தது. அப்போது கிருத்திகாவை மீட்க தனிப்படை போலீஸார் குஜராத் சென்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் மனு மீதான விசாரணையை மார்ச் 1ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.

இந்த நிலையில் கிருத்திகாவின் பெற்றோருக்கு முன் ஜாமீன் கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது முன்ஜாமீன் கொடுப்பதற்கு போலீஸார் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இந்த வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் கிருத்திகாவும் வினித்தும் செல்போனில் தொடர்பு கொண்டு பேசியது போன்ற ஒரு ஆடியோ வினித்தின் வழக்கறிஞர் மூலம் வெளியிடப்பட்டது. அதில் கிருத்திகா கூறுகையில் நான் யாருடைய மிரட்டலுக்கும் ஆளாகவில்லை.

எனது வாழ்க்கையையும் உனது வாழ்க்கையையும் கருத்தில் கொண்டு தான் இந்த முடிவை எடுத்துள்ளேன். எனவே நீ கொடுத்த கேஸை வாபஸ் பெற்றுக் கொள் என பேசியுள்ளார்.

இதற்கு வினித், நீ சொல்ல வேண்டிய விஷயத்தை நேரடியாக வந்து சொல், வழக்கை நான் வாபஸ் பெற்றுக் கொள்கிறேன் என பதில் அளிப்பது போல் இருந்தது. இந்த ஆடியோவும் வைரலாகி வருகிறது. போலீஸாருக்கும் கிருத்திகாவின் பெற்றோர் ஒத்துழைப்பு வழங்கவில்லை.

இதனால் கிருத்திகாவை எங்கே வைத்துள்ளார்கள் என தெரியவில்லை. இதையடுத்து குஜராத்தில் தீவிர தேடுதல் வேட்டையில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். கடத்தப்பட்ட கிருத்திகாவை பணய கைதி போல் வைத்து வீடியோ, ஆடியோ வெளியிட்டு வருகிறார்கள்.