குப்பை கொட்டத்தானே போனாள்…! எரித்துக் கொல்லப்பட்ட சிறுமியின் தந்தை கண்ணீர்!!

884

திருச்சியில் எரித்துக் கொல்லப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட 9ம் வகுப்பு மாணவியின் சடலம் பிரேத பரிசோதனைக்கு பின்னர் இன்று தகனம் செய்யப்பட்டது.

சோமரசம்பேட்டை அருகிலுள்ள அதவத்தூா் பாளையத்தைச் சோ்ந்த பெரியசாமி மகள் கங்காதேவி (14). 9-ஆம் வகுப்பு

படித்து வந்த இவா், சகத் தோழிகளுடன் நேற்று மதியம் விளையாடிக் கொண்டிருந்தாா். இயற்கை உபாதைக்காக காட்டுப் பகுதிக்குச் செல்வதாக வீட்டிலுள்ளவா்களிடம் கூறிச் சென்ற கங்காதேவி வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது தாய், காட்டுப் பகுதிக்குச் சென்று தேடிய போது, கருவேலமுள் பகுதியில் முகம் மற்றும் உடல் பாதி எரிந்த நிலையில் கங்காதேவி கிடப்பதை கண்டு சப்தமிட்டாா்.

இதைகேட்டு அப்பகுதி மக்கள் ஒன்றுகூடியதுடன், குற்றவாளிகளை உடனடியாக கண்டுபிடித்து தண்டனை கொடுக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சோமரசம்பேட்டை காவல் நிலையத்தினா் நிகழ்விடத்துக்கு வந்து, கங்காதேவியின் சடலத்தைக் கைப்பற்றினா்.


குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதற்காக வரவழைக்கப்பட்ட மோப்ப நாய் சிறிது தொலைவு சென்று, அப்பகுதியிலேயே படுத்துக் கொண்டது. இதனையடுத்து திருச்சி காவல்துறை கண்காணிப்பாளர், சரக டிஐஜி ஆனி விஜயா நேரில் சென்று சம்பவம் குறித்து விசாரித்ததுடன் குற்றவாளிகளை பிடிக்க 3 தனிப்படைகளை அமைத்தார்.

மேலும் போராட்டம் நடத்தியவர்களிடம், குற்றவாளிகள் எவராக இருந்தாலும் கண்டறிந்து, தண்டனை வாங்கித் தராமல் விடமாட்டோம். குழந்தைகள், பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது என உறுதியளித்தார்.

இதற்கிடையே, இன்று சிறுமியின் சடலம் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு தகனம் செய்யப்பட்டுள்ளது. அப்போது பேசிய சிறுமியின் தந்தை, வழக்கமாக குப்பைக் கொட்டும் இடத்திற்குத்தான் எனது மகள் குப்பை கொட்ட சென்றார்.

வீட்டிற்கு வரவில்லையே என்று போய் பார்த்ததும் இப்படி சடலமாக கிடைத்துள்ளாள், வீட்டிலும் பிரச்சினை இல்லை. யார் மீதும் சந்தேகமில்லை என கண்ணீர் மல்க பேசியுள்ளார்.