பறவை விரட்ட துப்பாக்கி … குழந்தை தவறுதலாக அழுத்தியதில் இளம்பெண் பலி!!

57

சேலம் மாவட்டத்தில், கோழி குஞ்சுகளை தூக்கி செல்லும் கழுகுகளிடம் இருந்து காப்பாற்றுவதற்காக வீட்டில் வைத்திருந்த ஏர்கன் துப்பாக்கியிலிருந்து வெளியேறிய குண்டு பாய்ந்து இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

துப்பாக்கியை சட்ட விரோதமாகவும், பாதுகாப்பு இல்லாமலும் வைத்திருந்ததாக இளம்பெண்ணின் சகோதரர்கள் இருவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சேலம் மாவட்டம் சங்ககிரியை அடுத்துள்ள வேங்கிபாளையம் பாப்பாங்காடு பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவருக்கு தமிழரசி என்ற மகளும், சரத்குமார் என்ற மகனும் உள்ளனர்.

இவரது அண்ணன் மகன் சதீஷ்குமார் அதே பகுதியில் வசித்து வருகிறார். கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு தமிழரசிக்கும், ஈரோடு மாவட்டம் பவானியைச் சேர்ந்த முருகேசன் என்பவருக்கும் திருமணம் நடைபெற்று உள்ளது. இவர்களுக்கு ரித்திக் ஸ்ரீ (10, தனிஷ்கா ஸ்ரீ (6) என்ற இரு குழந்தைகள் உள்ளனர்.

கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தமிழரசி தனது கணவனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தந்தை வீட்டிற்கு குழந்தைகளுடன் வந்து தங்கியுள்ளர். தந்தை வீட்டில் தங்கி இருந்த தமிழரசி அடிக்கடி பெரியப்பா வீட்டிற்கு சென்று வந்துள்ளார்.


செல்வராஜ் தனது வீட்டில் கோழிக்குஞ்சுகளை வளர்த்து வந்துள்ளார். இவற்றை அடிக்கடி கழுகுகள் தூக்கிச் சென்று விடுவதாக கூறப்படுகிறது. இதனை தடுப்பதற்காக ஏர்கன் ஒன்றை சரத்குமாரும், சதீஷ்குமாரும் பயன்படுத்தி வந்துள்ளனர். ஏர்கன் துப்பாக்கியில் குண்டை போட்டு மரத்திற்கு கீழ் உள்ள திண்ணையில் வைத்திருந்தனர்.

அப்போது அங்கு வந்த சரத்குமாரின் நான்கு வயது மகன் அந்த துப்பாக்கியின் ட்ரிகரை தெரியாமல் அழுத்தி உள்ளார். அப்போது அதிலிருந்து வெளியேறிய குண்டு அந்த வழியாக சென்று கொண்டிருந்த தமிழரசியின் வயிற்றில் பட்டு காயம் ஏற்பட்டுள்ளது.

ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து மயங்கிக் கிடந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஈரோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

ஆனால் சிகிச்சை பலனின்றி தமிழரசி நேற்று இரவு உயிர் இழந்தார். இது குறித்து தமிழரசியின் கணவர் முருகேசன் சங்ககிரி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது சட்டவிரோதமாக பயன்படுத்தப்பட்டு வந்த ஏர்கன் பறிமுதல் செய்யப்பட்டது.

தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், ஏர்கன்னை குண்டுடன் வைத்து விட்டு சென்றது சரத்குமாரும், சதீஷ்குமார் என்பது தெரியவந்தது. உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் என தெரிந்தே இது போன்ற சம்பவத்தில் ஈடுபட்ட இருவரையும், இன்று போலீஸார் கைது செய்தனர்.

துப்பாக்கி குண்டு பாய்ந்து தங்கை உயிரிழந்த நிலையில், அதற்கு காரணம் என சகோதரர்கள் இருவர் கைது செய்யப்பட்டு இருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.