கொரோனா தொற்று நோய் இல்லாத வீரர்களை பந்தில் எச்சில் தேய்க்க அனுமதியா..! இந்திய கிரிக்கெட் அணி வீரர் பேட்டி!

1081

கொரோனா தொற்று நோய் இல்லாத வீரர்களை பந்தில் எச்சில் தேய்க்க அனுமதிக்கலாம்! இந்திய கிரிக்கெட் அணி வீரர் பேட்டி

கொரோனா பாதிப்பு இல்லாத வீரர்கள் பந்தை எச்சிலால் தேய்க்க அனுமதிக்கலாம் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அகர்கர் கூறியுள்ளார்.

எச்சில் மூலம் கொரோனா வைரஸ் பரவ வாய்ப்பு இருப்பதால் கிரிக்கெட் போட்டியின் போது பந்தை பளபளப்பாக்க எச்சிலை பயன்படுத்தக்கூடாது என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தற்காலிகமாக தடை விதித்து உள்ளது. அதற்கு பதிலாக வியர்வையை பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பந்தை பளபளப்பாக்க எச்சிலை பயன்படுத்த விதிக்கப்பட்டு இருக்கும் தடை மூலம் பவுலர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் இந்த முடிவு பேட்ஸ்மேன்களுக்கு அனுகூலமாக அமையும் என்றும் இன்னாள் மற்றும் முன்னாள் வீரர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.


இது குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அகர்கர் கருத்து தெரிவிக்கையில், ‘தற்போதைய சூழ்நிலையில் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் அனைவரும் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு தான் அனுமதிக்கப்பட இருக்கிறார்கள்.

மருத்துவ பரிசோதனையின் போது வீரர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்று உறுதியான பிறகு அவர்கள் பந்தை எச்சிலால் தேய்க்க அனுமதிப்பது குறித்து பரிசீலனை செய்யலாம் என்பது எனது தனிப்பட்ட கருத்தாகும். இது குறித்து மருத்துவ துறையை சேர்ந்தவர்கள் தான் விரிவாக கருத்து தெரிவிக்க முடியும்.

தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு தான் எச்சிலை பயன்படுத்துவதை அனுமதிக்க சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மறுத்து இருக்கும் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. இருப்பினும் பந்தை பளபளக்கவைக்க எச்சிலை பயன்படுத்துவது மிகவும் முக்கியமானதாகும்.

இந்த விஷயத்தில் என்ன நடக்கிறது என்பதை இங்கிலாந்து-வெஸ்ட்இண்டீஸ் இடையிலான டெஸ்ட் போட்டி தொடர் வரை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். தற்போது உலக கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்கள் தான் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். பந்தை தேய்க்க எச்சிலை பயன்படுத்த தடை விதித்து இருப்பதன் மூலம் பவுலர்கள் மேலும் பாதிப்படைய நேரிடும் என கூறியுள்ளார்.